PDF chapter test TRY NOW

பொருள்கோள்
 
செய்யுளில் இடம்பெறும் சொற்களை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் எல்லாச் செய்யுள்களுக்கும் சரியான பொருள் கிடைக்காது.
 
யாப்பு முதலிய காரணங்களுக்காகச் சொற்களை முன்பின்னாக மாற்றுதல் முதலிய பல நிலைகளில் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் பொருள் கொண்டால் அச்செய்யுளின் பொருள்விளங்கும்.
 
இவ்வாறு செய்யுளில் காணப்படும் தொடர்களைப் பொருள் கொள்ளும் முறையை விளக்குவது பொருள்கோள் ஆகும்.
 
பொருள்கோள்  எட்டு வகைப்படும்.
 
1) ஆற்றுநீர்ப்  பொருள்கோள்
 
2) மொழிமாற்றுப்  பொருள்கோள்
 
3) நிரனிறைப்  பொருள்கோள்
 
4) விற்பூட்டுப்  பொருள்கோள் அல்லது  பூட்டுவிற்  பொருள்கோள்
 
5) தாப்பிசைப்  பொருள்கோள்
 
6) அளைமறிப் பாப்புப்  பொருள்கோள்
 
7) கொண்டுகூட்டுப்  பொருள்கோள்
 
8) அடிமறி மாற்றுப்   பொருள்கோள் 
 
யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண் தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டுகூட்டு அடிமறி மாற்றுஎனப் பொருள்கோள் எட்டே. - நன்னூல் - 411
 
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
 
சொற்களை அங்கும் இங்கும் மாற்றுதல் முதலிய வழிகளில் பொருள் கொள்வதற்கு இடம் இன்றி,
 
ஆற்று நீர் ஒரே தொடர்ச்சியாக ஒரு திசை நோக்கி ஓடுவதுபோல்,
 
செய்யுளில் சொற்கள் உள்ளவாறே வரிசை மாற்றாமல்,
 
தொடர்ச்சியாகப் பொருள்கொள்ளும் முறைக்கு ஆற்றுநீர்ப்பொருள்கோள் என்பது பெயர்.
 
சான்று
 
சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. -
சீவகசிந்தாமணி - 53
 
இப்பாட்டு, சொல் என்னும் எழுவாயைத் தொடர்ந்து, அதன் பல்வேறு செயல்கள், கருவிருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என எச்சங்களாக இடம்பெற, காய்த்த என்னும் வினைப் பயனிலையை இறுதியில் பெற்று முற்றுப் பெற்றது.
 
இப்பாட்டில் எச்சொல்லையும் இடம் மாற்றியோ வேறு வகையில் முன்பின்னாகக் கொண்டோ பொருள் கொள்ளாமல், சொற்கள் அமைந்துள்ள நிலையிலேயே பொருள் கொண்டுள்ளதைக் காணலாம்.
 
இவ்வாறு இப்பாடலில் சொற்களும், அவற்றின் பொருளும் ஆற்றுநீர் போல் தொடர்ச்சியாகச் செல்வதால் இப்பாடல் ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆயிற்று.
 
மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்றற்று ஒழுகும் அஃதுயாற்றுப் புனலே - நன்னூல் - 412