PDF chapter test TRY NOW

அளைமறி பாப்புப்பொருள்கோள்
 
அளை + மறி + பாம்பு என்பது அளைமறி பாப்பு என வந்துள்ளது.
 
அளை என்றால் வளை அல்லது புற்று என்று பொருள்.
 
பாப்பு என்பது பாம்பு எனப் பொருள்படும்.
 
புற்றுக்குள் முதலில் தன் தலையை நுழைக்கும் பாம்பு தன் உடல் முழுவதையும் இழுத்துக்கொண்டபின் தலையைப் புற்றின் வாய்ப் பகுதியிலும் வாலைப் புற்றின் அடிப்பகுதியிலுமாக மாற்றி வைத்துக் கொள்கிறது.
 
அது போலச் செய்யுளின் முதலில் உள்ள அடியை இறுதியிலும், இறுதியில் உள்ள அடியை முதலிலும் மாற்றிப் பொருள் கொள்ளும் முறைக்கு அளைமறி பாப்புப் பொருள்கோள் என்று பெயர்.
 
சான்று
 
தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து
தண்டூன்றித் தளர்வார் தாமும் சூழ்ந்த
வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில்
சுழல்வார் தாமும் மூழ்ந்த பிணிநலிய
முன்செய்த வினையென்றே முனிவார்
தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து
நெறிமுன்னி முயலா தாரே
 
இப்பாடலில் உள்ள ‘வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே’ என்னும் அடியை இப்பாடலில் முதலில் அமைத்தும், முதலில் உள்ள ‘தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார்’ என்னும் தொடரை இறுதியிலும் சேர்த்துப் பொருள் கொண்டால் மட்டுமே இப்பாடலின் பொருள் சரியாக அமையும்.
  
இவ்வாறு இறுதி அடியை முதலிலும் முதல் அடியை இறுதியிலும் இணைத்துப் பொருள் கொள்ளும் முறையே அளைமறி பாப்புப் பொருள்கோள் எனப்படும்.
செய்யுள் இறுதி மொழியிடை முதலினும்
எய்திய பொருள்கோள் அளைமறிப் பாப்பே - நன்னூல் - 417
கொண்டுகூட்டுப்பொருள்கோள்
 
செய்யுளில் உள்ள சொற்களை அவை அமைந்துள்ளவாறே பொருள் கொள்ளாமல், அதன் பல அடிகளிலும் உள்ள சொற்களைத் தேவையான இடங்களில் சேர்த்துப் பொருள் கொள்ளும் முறைக்குக் கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்.
 
சான்று
 
தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்.
 
இப்பாடலில் உள்ள சொற்களை அவை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால்
 
‘கூந்தல் தேங்காய் போலத் திரண்டு உருண்டுள்ளது’ என்றும்
 
‘மேனி வெண்கோழி முட்டை உடைத்தது போல் உள்ளது’ என்றும்,
 
‘அஞ்சனம் என்னும் கண்ணுக்குத் தீட்டும் மை போலக் கருப்பாக உள்ள பசலை’ என்றும் பொருள் கொள்ள வேண்டிவரும்.
 
அவ்வாறு கொள்வதால் பொருள் சிறக்காது. மாறாக ‘வங்கத்துச் சென்றார் வரின்,
 
அஞ்சனத் தன்ன பைங்கூந்தலை உடையாள் மேனி மேல்,
 
தெங்கங்காய் போலத் திரண்டு உருண்ட கோழி வெண்முட்டையை உடைத்தது போல உள்ள பசலை தணிவாம்’
 
எனச் செய்யுளின் பல அடிகளிலும் உள்ள சொற்களை வெவ்வேறு அடிகளுக்கு மாற்றிப் பொருள் கொண்டாலே பொருள் சிறக்கும்.
 
இவ்வாறு பொருள் கொள்வது கொண்டுகூட்டுப்பொருள்கோள் எனப்படும்.
யாப்படி பலவினும் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே - நன்னூல் - 418
அடிமறி மாற்றுப் பொருள்கோள்
 
கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்பது ஒரு செய்யுளில் வெவ்வேறு அடிகளில் உள்ள சொற்களைத் தேவைக்கேற்பச் செய்யுளின் பிற அடிகளில் உள்ள சொற்களோடு பொருத்திப் பொருள் காண்பது என மேலே கூறப்பட்டது.
 
அடிமறி மாற்றுப் பொருள்கோள் என்பது, செய்யுளில் உள்ள அடிகளையே மேலும் கீழுமாக எங்கு வேண்டுமானாலும் மாற்றிப் பொருள்கொள்ளும் முறையாகும்.
 
அவ்வாறு மாற்றிப் பொருள் கொண்டாலும் செய்யுளின் பொருள் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சான்று
 
மாறாக் காதலர் மலைமறைந் தனரே
ஆறாக் கண்பனி வரலா னாவே
ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே.
 
 இச்செய்யுளின் எந்த ஓர் அடியையும் மேலும் கீழுமாக எங்கே வேண்டுமானாலும் மாற்றிப் பொருள் கொண்டாலும் இச்செய்யுளின் பொருளில் மாற்றம் ஏற்படாது.
 
அதாவது ஒவ்வோர் அடியிலும் ஒரு கருத்து முற்றுப் பெற்றுள்ளதோடு அடுத்த அடிக்குப் பொருள் தொடர் பற்றுத் தனித் தனிக் கருத்தாக அமைந்துள்ளது.
ஏற்புழி எடுத்துடன் கூட்டுறும் அடியவும் யாப்பீறு
இடைமுதல் ஆக்கினும் பொருளிசை மாட்சியும்
மாறா அடியவும் அடிமறி - நன்னூல் - 419
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு பத்து - திருந்திய பதிப்பு 2020.
 
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.