PDF chapter test TRY NOW

வேற்றுமை அணி
 
தேனும் வெள்ளைச் சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை.
 
அவற்றுள், தேன் உடலுக்கு நன்மை செய்யும்;
 
வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும்.
 
இப்பகுதியைக் கவனியுங்கள். வெள்ளைச் சர்க்கரைக்கும் தேனுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு.
 
இரண்டும் இனிப்புச்சுவை உடையவை என்பது ஒற்றுமை.
 
ஒன்று உடலுக்கு நன்மை செய்யும்; இன்னொன்று தீங்கு செய்யும் என்பது வேற்றுமை.
 
இவ்வாறு இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.
சான்று
  
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
  
இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறது.
 
பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது.
 
எனவே இது வேற்றுமை அணி ஆகும்.