PDF chapter test TRY NOW

1.jpg

தமிழில் இயல் உண்டு; இசை உண்டு; நாடகம் உண்டு; இவை மட்டுமல்ல அறிவியலும் உண்டு. தமிழுக்கு அறிவியல் புதிதல்ல. அன்று முதல் இன்று வரை அறிவியல் செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக வெளியிட்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இலக்கியங்கள் கூறும் செய்திகளை அறிவோமோ!

இடம் : மதுரை

நாள் : 12-05-2017 

அன்புள்ள அத்தைக்கு, 

வணக்கம். நான்நலம். நீங்கள் நலமா? என் பள்ளிப் பருவக் கனவு நனவாகி விட்டது. ஆம் அத்தை. இளம் அறிவியல் ஆய்வாளர் பணிக்கு நான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன். நாளை காலை சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேரவேண்டும். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உங்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். நான் ஆறாம் வகுப்பு படித்தபோது உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேனே! நினைவிருக்கிறதா?


Letter.png  1555073263.svg

 

அதன் பிறகு நீங்கள் எனக்குத் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதினீர்கள். செய்திகள் பலவற்றைக் கூறி ஊக்கம் அளித்துக்கொண்டே இருந்தீர்கள். என் ஐயங்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைத்தீர்கள். என் கனவுகளுக்கு உரம் ஊட்டியவை உங்களின் கடிதங்களே! அக்கடிதங்களை அறிவுக் கருவூலங்களாக இன்றும் பாதுகாத்து வருகிறேன். என்னுடைய உயர்வுக்குக் காரணமான அவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது.
  

menina-estudante-contente.svg

இடம் : சென்னை

நாள் : 04-03-2006

அன்புள்ள இன்சுவை,

இங்கு நான் நலமாக இருக்கிறேன். உன் கடிதம் கிடைத்தது. ஆறாம் வகுப்பிலேயே எதிர்கால இலக்கினை நீ உருவாக்கிக் கொண்டு விட்டாய். மகிழ்ச்சி! தமிழில் படித்தால் சாதிக்க முடியாது என்பது தவறான எண்ணம். சாதனையாளர்கள் பலரும் தங்கள் தாய்மொழியில் படித்தவர்களே! சாதனைக்கு மொழி ஒரு தடையே இல்லை. 

நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் தமிழர்கள். தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை உன்னுடன் பகிர நினைக்கிறேன். 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் எனும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார். 

கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார் நாற்பது, திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

     திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து

 

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி.
                    என ஔவையார் பாடலில் கூறப்பட்டுள்ளது. 
  

போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. 

சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது. முற்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவத்துக்கான இன்றைய கூறுகள் வியப்பளிக்கின்றன அல்லவா?

    தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.

தற்காலத்தில் அறிவியல் துறையில் மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் கோலோச்சி வருகிறார்கள்.

சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்துகொள். நமது ஊர் நூலகம் உனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நூல் வாசிப்பு உன் சிந்தனைக்கு வளம் சேர்க்கும். அறிவியல் மனப்பான்மை பெருகும்.

தமிழாலும் தமிழராலும் எந்தத் துறையிலும் எதையும் சாதிக்க முடியும். தொடர்ந்து முயற்சி செய். நீ வெல்வாய்! கனவு நனவாக வாழ்த்துகிறேன்.

அன்புடன் உன் அத்தை,

நறுமுகை.

 

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் 

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.  

- தொல்காப்பியம்

 

கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி…

- கார்நாற்பது

 

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.

- பதிற்றுப்பத்து

 

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்

- நற்றிணை

 

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட 

பனையளவு காட்டும்.

- திருவள்ளுவமாலை

 
shutterstock_451837552.jpg
 

நீங்கள் கூறியபடி நூல்கள் பலவற்றையும் தொடர்ந்து படித்து வந்தேன். உங்கள் அன்பு என்எண்ணம் நிறைவேற உறுதுணையாக விளங்கியது. தமிழ் இலக்கியங்களும் பிறநூல்களும் எனக்கு நம்பிக்கை ஊட்டின. இவற்றை நான் என்றும் மறக்க மாட்டேன். சமுதாயத்திற்கு என்னால் இயன்ற நன்மைகளைச் செய்வேன். அதற்கேற்பப் பணியாற்றுவேன். நன்றி அத்தை. 

அன்புடன், 

       இன்சுவை.

தெரிந்து தெளிவோம்:

தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்:

• மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்.

• இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.

• இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை.சிவன்.
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருத்திய பதிப்பு(2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி - கனவுபலித்தது (ப.எண்.15-17) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.
https://pixabay.com/vectors/classroom-comic-characters-project-1-1297781/
https://freesvg.org/lady-writing