PDF chapter test TRY NOW

தொழிற்பெயர்
 
ஏதேனும் ஒரு தொழிலை உணர்த்தும் (தொழிலின் பெயராக வரும்) பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
 
தொழிற்பெயர் அல், தல் முதலிய விகுதிகளைப் பெற்று வரும்.
 
(எ.கா) ஆடல், நாடல்    - அல் விகுதி ஆடுதல், நாடுதல் - தல் விகுதி
 
இந்த எடுத்துக்காட்டுகளில் முதலில் உள்ள ஆடல், நாடல் ஆகியவை அல் என்னும் விகுதியைப் பெற்றுள்ளன.
 
ஆடுதல், நாடுதல் ஆகியவை தல் என்னும் விகுதியைப் பெற்றுள்ளன.
 
இவ்விகுதிகள் இல்லாமலும் தொழிற்பெயர் வருவதுண்டு.
 
அத்தகைய தொழிற்பெயர் இரண்டு வகைப்படும்.
 
அவை:
 
1. முதனிலைத் தொழிற்பெயர்  
  
2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
 
முதனிலைத் தொழிற்பெயர்
 
தொழிற்பெயர் தனக்குரிய விகுதியைப் பெறாமல் பகுதி (முதனிலை) மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.
 
(எ.கா) சோறு கொதி வந்தது. மின்னி இடி இடித்தது.
 
இவை கொதித்தல், இடித்தல் என்று வராமல் கொதி, இடி என்று பகுதி மட்டும் வந்துள்ளன.
 
எனவே இவை முதனிலைத் தொழிற்பெயர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  
தொழிற்பெயரின் விகுதியைப் பெறாத முதனிலை, திரிந்து (மாறுபட்டு) வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
 
(எ.கா) கெடுவான் கேடு நினைப்பான்.
  
காந்தியடிகள் துப்பாக்கிக் சூடுபட்டு இறந்தார்.
 
இந்த எடுத்துக்காட்டுகளில் கெடு என்னும் முதனிலை கேடு என்றும் சுடு என்னும் முதனிலை சூடு என்றும் மாறி வந்துள்ளன.
 
எனவே இவை முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் என்று அழைக்கப்படுகின்றன.