PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
 
கதையை படித்தேன்; எழுதி கொண்டேன். அப்படி சொன்னது, எப்படி தெரியும்?
 
மேலே உள்ள தொடர்களைப் படித்துப் பாருங்கள்.
 
இவற்றை இயல்பாகப் படிக்க இயலாதவாறு சொற்களுக்கு இடையே ஓர் ஓசை இடைவெளி இருப்பதை உணர முடிகிறதல்லவா? அவற்றைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள்.
 
கதையைப் படித்தேன்; எழுதிக் கொண்டேன். அப்படிச் சொன்னது, எப்படித் தெரியும்? இப்போது இயல்பாகப் படிக்க முடிகிறது அல்லவா?
 
மேலும், நாம் பேசும்போது இவ்வாறுதான் பேசுகிறோம்.
 
ஒரு சொல்லின் முதலெழுத்து க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய்எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும்.
 
இதனை வல்லினம் மிகல் என்று கூறுவர்.
 
எல்லா இடங்களிலும் வல்லின மெய்எழுத்து மிகும் என்று கூறமுடியாது.
 
மிதந்து சென்றது, செய்து பார்த்தான், படித்த கவிதை, பெரிய தாவரம் ஆகிய சொற்களில் வல்லினம் மிகவில்லை என்பதைக் கவனியுங்கள்.
 
இவ்வாறு வல்லின மெய் மிகக்கூடாத இடங்களை வல்லினம் மிகா இடங்கள் எனக் குறிப்பிடுவர்.
 
வல்லின மெய்களைச் சேர்த்து எழுதுவதன் நோக்கம் படிப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பது மட்டுமன்று.
 
செய்திகளில் கருத்துப் பிழையோ, பொருள் குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கும் வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன.
 
மண்வெட்டி கொண்டு வா. மண்வெட்டிக் கொண்டு வா.
 
இவற்றில், முதல் தொடர் மண்வெட்டியை எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது.
 
இரண்டாம் தொடர் மண்ணை வெட்டி எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது.
 
இவ்வாறு பொருள் தெளிவை ஏற்படுத்தவும் வல்லினம் மிகுதல் உதவுகிறது.
 
வல்லினம்மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும்.
 
இதனைச் சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் குறிப்பிடுவர்.