PDF chapter test TRY NOW

வல்லினம் மிகும் இடங்கள்
நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிர்களின் முன்னரும், ய,ர,ழ என்னும் மெய்களின் முன்னரும் வருமொழி முதலில் வருகின்ற க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைச் சான்றுடன் காண்போம்.
 
சுட்டு, வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன் வல்லினம் மிகல்
 
அ, இ என்பன சுட்டு எழுத்துகள் ; எ, யா என்பன வினா எழுத்துகள்.
 
இவற்றின் முன்னும், இவற்றின் அடியாகத் தோன்றிய அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, யாங்கு; அப்படி, இப்படி, எப்படி; ஆண்டு, ஈண்டு, யாண்டு; அவ்வகை, இவ்வகை, எவ்வகை, அத்துணை, இத்துணை, எத்துணை என்னும் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
 
சான்று :
 
அ + காலம் = அக்காலம்
எ + திசை = எத்திசை
அந்த + பையன் = அந்தப் பையன்
எந்த + பொருள் = எந்தப் பொருள்
அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்
எங்கு + போனான் = எங்குப் போனான்
யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான்
அப்படி + சொல் = அப்படிச் சொல்
எப்படி + சொல்வான் = எப்படிச் சொல்வான்
ஈண்டு + காண்போம் = ஈண்டுக் காண்போம்
யாண்டு + காண்பேன் = யாண்டுக் காண்பேன்
அவ்வகை + செய்யுள் = அவ்வகைச் செய்யுள்
எத்துணை + பெரியது = எத்துணைப் பெரியது
 
ஓர் எழுத்துச் சொற்களின் முன் வல்லினம் மிகல்
 
கை, தீ, தை, பூ, மை என்னும் ஓர் எழுத்துச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.
 
சான்று :
 
கை + குழந்தை = கைக்குழந்தை
கை + பிடி = கைப்பிடி
தீ + பிடித்தது = தீப்பிடித்தது
தீ + பெட்டி = தீப்பெட்டி
தீ + புண் = தீப்புண்
தை + பொங்கல் = தைப்பொங்கல்
தை + திருநாள் = தைத்திருநாள்
பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
பூ + பல்லக்கு = பூப்பல்லக்கு
மை + கூடு = மைக்கூடு
மை + பேனா = மைப்பேனா
 
குற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகல்
 
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், சில மென்தொடர் மற்றும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், உயிர்த்தொடர் போன்ற அமைப்பை உடைய சில முற்றியலுகரச் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
 
வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்
 
சான்று :
 
பாக்கு + தோப்பு = பாக்குத்தோப்பு
அச்சு + புத்தகம் = அச்சுப்புத்தகம்
எட்டு + தொகை = எட்டுத்தொகை
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
இனிப்பு+ சுவை = இனிப்புச்சுவை
கற்று + கொடுத்தான் = கற்றுக்கொடுத்தான்
 
சில மென்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்
 
சான்று :
 
குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி
பஞ்சு + பொதி = பஞ்சுப்பொதி
துண்டு + கடிதம் = துண்டுக்கடிதம்
மருந்து + சீட்டு = மருந்துச் சீட்டு
பாம்பு + தோல் = பாம்புத்தோல்
கன்று + குட்டி = கன்றுக்குட்டி
 
இவற்றை வல்லினம் மிகாமல் குரங்கு குட்டி, மருந்து சீட்டு என்று எழுதினால் குரங்கும் குட்டியும், மருந்தும் சீட்டும் என்று பொருள்பட்டு உம்மைத் தொகைகள் ஆகிவிடும்.
  
சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல் 
 
சான்று :
 
முதுகு + தண்டு = முதுகுத்தண்டு
விறகு + கடை = விறகுக்கடை
படகு + போட்டி = படகுப்போட்டி
பரிசு + புத்தகம் = பரிசுப்புத்தகம்
மரபு + கவிதை = மரபுக்கவிதை
 
முற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகல்
 
தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேலும், பிற மெய்களின் மேலும் ஏறிவருகின்ற உகரம் முற்றியலுகரம் எனப்படும்.
 
நடு, புது, பொது, பசு, திரு, தெரு, முழு, விழு என்னும் முற்றியலுகரச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.
 
சான்று :
 
நடு + கடல் = நடுக்கடல்
புது + புத்தகம் = புதுப்புத்தகம்
பொது + பணி = பொதுப்பணி
பசு + தோல் = பசுத்தோல்
திரு + கோயில் = திருக்கோயில்
தெரு + பக்கம் = தெருப்பக்கம்
முழு + பேச்சு = முழுப்பேச்சு
விழு + பொருள் = விழுப்பொருள்
 
தனி நெட்டெழுத்தை அடுத்தோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினமெய் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வருகின்ற உகரமும் முற்றியலுகரம் ஆகும்.
 
இத்தகைய முற்றியலுகரச் சொற்கள் பெரும்பாலும் ‘வு’ என முடியும். இவற்றின் முன் வரும் வல்லினமும் மிகும்.
 
சான்று :
 
சாவு + செய்தி = சாவுச்செய்தி
உணவு + பொருள் = உணவுப்பொருள்
உழவு + தொழில் = உழவுத்தொழில்
நெசவு + தொழிலாளி = நெசவுத்தொழிலாளி
தேர்வு + கட்டணம் = தேர்வுக்கட்டணம்
கூட்டுறவு + சங்கம் = கூட்டுறவுச் சங்கம்
பதிவு + தபால் = பதிவுத்தபால்
இரவு + காட்சி = இரவுக்காட்சி