PDF chapter test TRY NOW

நிரல்நிறை அணி
 
நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல்.
 
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.
 
சான்று
  
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - குறள் : 45
  
பாடலின் பொருள்
 
இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
 
அணிப்பொருத்தம்
 
இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.
 
தன்மையணி
 
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும்
.
இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
 
இவ்வணி நான்கு வகைப்படும்.
 
1. பொருள் தன்மையணி
 
2. குணத் தன்மையணி
 
3. சாதித் தன்மையணி
 
4. தொழிற் தன்மையணி என்பனவாகும்.
 
சான்று
  
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.
 
சிலம்பு - வழக்குரை காதை வெண்பா
 
பாடலின் பொருள்
 
உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை நதி பாயும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான்.
 
அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான். அணிப்பொருத்தம் கண்ண கியின் துயர் நி றைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.
 
“எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்
சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்“ - தண்டியலங்காரம்: 27.