PDF chapter test TRY NOW

செய்யுளுக்கு அழகு தருவனவாகிய அணிகள் சிலவற்றை முன் வகுப்புகளில் கற்றோம்.
 
இன்னும் சில அணிகளை இங்குக் கற்போம்.
 
பிறிது மொழிதல் அணி
 
மலையப்பன் சிறந்த உழைப்பாளி.
 
ஆனால் தனது உடல்நலத்தில் அக்கறை காட்ட மாட்டான்.
 
அதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவான்.
 
ஒருமுறை நோயுற்றிருந்த அவனைப் பார்க்கவந்த அவனது உறவினர் ஒருவர்,
 
“தம்பி சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
 
இதை நன்றாகப் புரிந்துகொள்” என்றார்.
 
மலையப்பன், “எனக்கும் இப்போதுதான் புரிகிறது.
 
இனி நான் என் உடல்நலத்தில் போதிய அக்கறை செலுத்துவேன்”என்றான்.
 
இப்பகுதியைப் படித்துப் பாருங்கள்.
 
“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல உடல் நலமாக இருந்தால்தான் உழைக்க முடியும்”என்று சொல்லவந்த உறவினர் உவமையை மட்டுமே கூறினார்.
 
அவர் சொல்லவந்த கருத்தை மலையப்பன் தானாகப் புரிந்துகொண்டான்.
 
இவ்வாறு உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
  
சான்று
  
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
 
இத்திருக்குறள், ”நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது” என்று உவமையை மட்டும் கூறுகிறது.
 
இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்;
 
தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என்னும் கருத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
 
எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.