PDF chapter test TRY NOW
எடுத்தல் அளவையாகு பெயர்
ஓர் எடுத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) மூன்று கிலோ வாங்கி வா.
இதில் கிலோ என்னும் எடுத்தல் அளவைப் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
முகத்தல் அளவையாகு பெயர்
ஒரு முகத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது முகத்தல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) ஐந்து லிட்டர் வாங்கி வா.
இதில் லிட்டர் என்னும் முகத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
நீட்டல் அளவையாகு பெயர்
ஒரு நீட்டல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவையாகு பெயர்எனப்படும்.
(எ.கா) இரண்டு மீட்டர் கொடுங்கள்.
இதில் மீட்டர் என்னும் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
சொல்லாகு பெயர்
சொல்லைக் குறிக்கும் பெயர் சொல்லுடைய பொருளுக்கு ஆகி வருவது சொல்லாகு பெயர் எனப்படும்.
(எ.கா) இந்த உரை எனக்கு மனப்பாடம்.
இதில் உரை என்னும் சொல், அச்சொல்லின் பொருள் அமைந்த நூலுக்கு ஆகி வந்துள்ளது.
தானியாகு பெயர்
ஓர் இடத்தில் உள்ள பொருளின் பெயர் (தானி) அது சார்ந்திருக்கும் இடத்திற்கு (தானத்திற்கு) ஆகி வருவது தானியாகு பெயர் எனப்படும்.
(எ.கா) அடுப்பிலிருந்து பாலை இறக்கு.
இதில் பால் என்பது அது சார்ந்திருக்கும் பாத்திரத்தைக் குறிக்கிறது.
பாலை இறக்கு என்றால் பால் இருக்கும் பாத்திரத்தை இறக்கு என்றே பொருள் கொள்ளப்படுகிறது.
கருவியாகு பெயர்
ஒரு கருவியின் பெயர் அக்கருவியால் ஆகும் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும்.
(எ.கா) நான் குறள் படித்தேன்
இதில் குறள் என்பது குறள் வெண்பாவைக் குறிக்கும் சொல்.
ஆனால் இங்கே குறள் வெண்பாவால் ஆக்கப்பட்ட பாக்களைக் குறிக்கிறது.
காரியவாகு பெயர்
ஒரு காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்கு (கருவிக்கு) ஆகி வந்தால் காரியவாகு பெயர் எனப்படும்.
(எ.கா) நான் அலங்காரம் கற்றேன்.
இதில் அலங்காரம் என்னும் சொல் அலங்காரத்தைக் (அணியை) கற்பிக்கும் நூலுக்கு ஆகி வந்துள்ளது.
கருத்தாவாகு பெயர்
ஒரு கருத்தாவின் பெயர் அக்கருத்தாவால் செய்யப்பட்ட பொருளுக்கு ஆகி வருவது கருத்தாவாகு பெயர் எனப்படும்.
(எ.கா) இவருக்கு வள்ளுவர் மனப்பாடம்.
இதில் வள்ளுவர் என்னும் சொல் வள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் நூலுக்கு ஆகி வந்துள்ளது.
உவமையாகு பெயர்
ஓர் உவமையின் பெயர் அதனால் உணர்த்தப் பெறும் உவமேயத்திற்கு ஆகி வருவது உவமையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) காளை வந்தான்.
இதில் காளை என்னும் சொல், காளை போன்ற வீரனுக்கு ஆகி வந்துள்ளது.
காளை - உவமை வீரன் - பொருள்.
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு பத்து - திருந்திய பதிப்பு 2020.
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.