PDF chapter test TRY NOW

கூட்டுவினைகள் பொதுவாக மூன்று வகையாக ஆக்கப்படுகின்றன.
 
1) பெயர் + வினை = வினை
 
தந்தி + அடி = தந்தியடி
ஆணை + இடு = ஆணையிடு
கேள்வி + படு = கேள்விப்படு
 
2) வினை + வினை = வினை
 
கண்டு + பிடி = கண்டுபிடி
சுட்டி+ காட்டு = சுட்டிக்காட்டு
சொல்லி + கொடு = சொல்லிக்கொடு
 
3) இடை + வினை = வினை
 
முன் + ஏறு = முன்னேறு
பின் + பற்று = பின்பற்று
கீழ் + இறங்கு = கீழிறங்கு
 
முதல்வினையும் துணைவினையும்
 
நான் படம் பார்த்தேன்.
கண்ணன் போவதைப் பார்த்தேன்.
 
இந்தச் சொற்றொடர்களில், பார் என்னும் வினை, கண்களால் பார்த்தல் என்னும் பொருளைத் தருகிறது. இது பார் என்னும் வினையின் அடிப்படைப் பொருள் அல்லது சொற்பொருள்(LEXICAL MEANING) எனலாம்.
 
ஓடப் பார்த்தேன்.
எழுதிப் பார்த்தாள்.
 
இந்தச் சொற்றொடர்களில் ஓடப்பார், எழுதிப்பார் என்பன கூட்டுவினைகள் ஆகும். இவற்றில் இரண்டு உறுப்புகள் உள்ளன.
 
ஓட, எழுதி என்பன முதல் உறுப்புகள். இவை அந்தந்த வினைகளின் அடிப்படைப் பொருளைத் தருகின்றன. பார் என்பது இரண்டாவது உறுப்பு. இது இவ்வினையின் அடிப்படைப் பொருளான பார்த்தல் என்னும் பொருளைத் தராமல் தனது முதல் உறுப்போடு சேர்ந்து வேறு பொருள் தருகிறது.
 
ஓடப் பார்த்தேன் - இதில் பார் என்பது முயன்றேன் என்னும் முயற்சிப் பொருளைத் தருகிறது.
 
எழுதிப் பார்த்தாள் - இதில் பார் என்பது சோதித்து அறிதல் என்னும் பொருளைத் தருகிறது.