PUMPA - THE SMART LEARNING APP
AI system creates personalised training plan based on your mistakes
Download now on Google Playஅணி – அழகு
செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும்.
சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது ’அணி’ இலக்கண இயல்பாகும்.
உவமைஅணி
அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும்.
மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.
மலர்ப்பாதம் – மலர் போன்ற பாதம் இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது.
பாதம் - பொருள் (உவமேயம்)
மலர் - உவமை
போன்ற - உவம உருபு
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
இதில் உவமையணி அமைந்துள்ளது.
உருவக அணி
கவிஞன், தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான்.
உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறும் இத்தன்மையே ’உருவகம்’ எனக் கூறப்படும்.
உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.
சான்று
இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.
இப்பாடலில், இன்சொல் – நிலமாகவும், வன்சொல் – களையாகவும், வாய்மை – எருவாகவும், அன்பு – நீராகவும், அறம் - கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.
பின்வருநிலை அணிகள்
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே ’பின்வருநிலை’ அணியாகும்.
இது மூன்று வகைப்படும்.
சொல் பின்வருநிலையணி
முன் வந்த சொல்லே பின்னும் பல விடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொல்பின்வருநிலை அணியாகும்.
சான்று
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இக்குறளில் ’துப்பு’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது.
துப்பார்க்கு – உண்பவர்க்கு; துப்பு – நல்ல, நன்மை; துப்பு – உணவு என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம்.
பொருள் பின்வருநிலையணி
செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது பொருள்பின் வருநிலையணி ஆகும்.
சான்று
அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை.
இச்செய்யுளில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன.
சொற்பொருள் பின்வருநிலையணி
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
சான்று
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
இக்குறட்பாவில் ’விளக்கு’ என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
வஞ்சப் புகழ்ச்சியணி
வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போல புகழ்வதுமாகும்.
சான்று
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது. எனவே, இது புகழ்வது போலப் பழிப்பது ஆகும்.
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே .
இப்பாடலின் பொருள் :
புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைமாறு கருதாமல் கொடுக்கின்றான்? மழையும்தான் கைமாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகத்தைப் புரக்கிறது. இது பழிப்பது போலப் புகழ்வது ஆகும். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது.