Theory:
நாம் தினம்தோறும் பார்க்கும் அனைத்து பொருட்களுமே மூலக்கூறுகளால் ஆனது. அப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் அனைத்தும் எப்பொழுதும், அதிர்விலோ அல்லது இயக்கத்திலோ இருக்கும்.
அவற்றின் அதிர்வையோ அல்லது இயக்கத்தையோ நம் கண்களால் பார்க்க இயலாது. ஆனால், பொருட்களை வெப்பப்படுத்தும் போது அதிலுள்ள மூலக்கூறுகளின் அதிர்வும், இயக்கமும் அதிகரிக்கும். மேலும் அப்பொருளின் வெப்பநிலையும் உயரும்.
மூலக்கூறுகளின் நிலை - வெப்படுத்துவதற்கு முன் ,வெப்பப்படுத்திய பின்
வெப்பம் என்பது ஒரு பொருளின் வெப்பநிலையை உயர செய்து, அப்பொருளின் மூலக்கூறுகளை வேகமாக இயக்க வைக்கக்கூடிய ஒரு வகையான ஆற்றல் ஆகும்.
வெப்பம் என்பது ஒரு பொருளல்ல. அது இடத்தினை ஆக்கிரமிப்பதில்லை. ஒலி, ஒளி மற்றும் மின்சாரத்தைப் போல இதுவும் ஒரு வகையான ஆற்றலாகும்.
- ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலே அப்பொருளின் வெப்பம் என்றழைக்கப்படுகிறது.
- வெப்பத்தின் \(SI \)அலகு ஜூல் ஆகும். மேலும் கலோரி என்ற அலகும் வெப்பத்தை அளக்கப் பயன்படுகிறது.