PDF chapter test TRY NOW
அறிமுகம்:
பூமியில் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அறிவியல் அறிஞர்கள் கருத்துப்படி, பூமியிலுள்ள மொத்த உயிரினங்களில் \(70\) முதல் \(100\) இலட்சம் வரை சிற்றினங்கள் வாழ்வதாகக் கருதப்படுகின்றன.
தாவர மற்றும் விலங்கு தொடர்பு
உயிரினங்களின் பன்முகத்தன்மை என்பது சிற்றினங்களின் மொத்தத் தொகுப்பாகும்.
’உயிரி’ என்பது உயிரினம் என்றும், ’பன்முகத்தன்மை’ என்பது பல்வேறு அல்லது வேறுபட்டது என்றும் பொருள்படும். எனவே, உயிரினங்களின் பன்முகத்தன்மை என்பது புவியிலுள்ள பல வகையான உயிரினங்களையும், அதற்கிடையேயுள்ள உறவையும் குறிக்கிறது. மலைப் பாதையில் உள்ள காடுகள் வழியாக வாகனங்களில் செல்லும் போது, நாம் பல வகையான உயிரினங்களைப் பார்க்கலாம்.
காடுகள், மலர் மற்றும் பழங்கள் கொண்ட மரங்களால் நிறைந்து காணப்படுவதோடு மட்டுமன்றி பறவைகளின் ஓசை, மான்களின் ஓட்டம் மற்றும் பல்வேறு பட்ட உயிரினங்களின் இருப்பிடமாகவும் உள்ளது.
இந்திய நாடு மிக அதிகமான காடுகளைக் கொண்ட வனவிலங்குகளால் நிறைந்த நாடு என பல்வேறு காலத்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. ஆனால் சமீப காலமாக மனிதன் தன் தேவையை நிறைவேற்ற இயற்கை வளம் நிறைந்த காடுகளை அழிப்பதால் அதன் நிலப்பரப்பளவு மிகவும் குறைந்து காணப்படுகிறது.
இந்த பாடப் பகுதியில் , காடுகள் அழிப்பு, அழியும் தருவாயிலுள்ள சிற்றினங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள் பற்றி நாம் கற்றுக் கொள்ளவிருக்கிறோம்.
காடு அழிப்பு:
காடுகள் உலகில் 30 சதவீத நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. இவை மனிதர்களால் மீண்டும் மீண்டும் புதுப்பிக்க இயலும் ஒரு வளமாகும். அதோடு வளிமண்டலத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கார்பன் டை ஆக்சைடின் அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் இவை பெரிதும் உதவுகின்றன. மேலும், காடுகளிலிருந்து பல முக்கியப் பொருள்களான மரக்கட்டை, காகிதம் மற்றும் மருந்துப் பொருள்களும் கிடைக்கிறது.
காடுகள் நீர் போகும் பாதையைக் கட்டுப்படுத்தி மண் வளத்தைப் பாதுகாக்கும். அதுமட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால், மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக நிலப்பரப்பு பயன்படுவதால் உலகில் உள்ள காடுகள் அழிக்கப்படுகிறது. இதுவே காடு அழிப்பு ஆகும்.
காடுகள் அழிக்கப்படுவதால் வெப்பநிலை அதிகரிக்கும் மற்றும் மழைப்பொழிவு குறையும். இது போன்ற நிலைகளால் சுற்றுச்சூழல் சமநிலையின்மை ஏற்படுகின்றன. காடுகளில் வாழும் பல்வேறு தாவர மற்றும் விலங்கு சிற்றினங்களின் மறைவிற்குக் காடுகள் அழிப்பு மிக முக்கிய காரணமாக உள்ளது.
காடுகள் அழிப்பு