PDF chapter test TRY NOW

கண்ணோட்டம் (58)
 
பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். 
 
பொருள்:
 
பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையாய் என்ன பயன்? அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்?
 
அணி: எடுத்துக்காட்டு உவமையணி
 
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு.
 
பொருள்:
 
நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.
 
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
 
பொருள்:
 
விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக் கொண்டவர்கள், பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் அதனை உண்ணும் பண்பாளர் ஆவார்.
 
ஆள்வினை உடைமை (62)
 
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்.
பெருமை முயற்சி தரும். 
 
பொருள்:
 
ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எண்ணிச் சோர்வு அடையாதிருக்க வேண்டும். அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.
 
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே 
வேளாண்மை என்னும் செருக்கு.
 
பொருள்:
 
விடாமுயற்சி என்ற உயர்பண்பு கொண்டவர்களால்தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.