PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google Playபெயர்ச்சொல்
மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன.
இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
அவை
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. காலப்பெயர்
4. சினைப்பெயர்
5. பண்புப்பெயர்
6. தொழிற்பெயர்
1. பொருட்பெயர்
பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்.
இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.
(எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.
2. இடப்பெயர்
ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.
(எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.
3. காலப்பெயர்
காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
(எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.
4. சினைப்பெயர்
பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.
(எ.கா.) கண், கை, இலை, கிளை.
5. பண்புப்பெயர்
பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.
(எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.
6. தொழிற்பெயர்
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
(எ.கா) படித்தல், ஆடுதல், நடித்தல்
அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதிப் பார்ப்போம்.
காவியா புத்தகம் படித்தாள் - பொருட்பெயர்
காவியா பள்ளிக்குச் சென்றாள் - இடப்பெயர்
காவியா மாலையில் விளையாடினாள் - காலப்பெயர்
காவியா தலை அசைத்தாள் - சினைப்பெயர்
காவியா இனிமையாகப் பேசுவாள் - பண்புப்பெயர்
காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் - தொழிற்பெயர்