PUMPA - THE SMART LEARNING APP
AI system creates personalised training plan based on your mistakes
Download now on Google PlayTheory:
நம் அன்றாட வாழ்வில், நம்மைச் சுற்றி பல பொருட்களைப் பார்க்கிறோம். அவற்றில் சில பொருட்கள் ஓய்வு நிலையிலும், சில பொருட்கள் நகரும் நிலையிலும் உள்ளன. பொருள்கள் எவ்வாறு நகர்கின்றன, அவை நகர்வதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தது உண்டா?
Example:
ஒரு நாற்காலி அல்லது மேசையிலிருந்து எழுந்தவுடன், அதற்கு எதிராக நம்மை தள்ளுகிறோம்.

நாம் வீட்டிற்குள் நுழையும் போது
- வீட்டிற்குள் நுழையும் போது, நாம் எப்பொழுதும் மூடிய கதவை கைகளால் தள்ளவோ அல்லது இழுக்கவோ செய்கிறோம்.
- ஒரு கிரிக்கெட் போட்டியில், பந்தை அடிக்க மட்டையைப் பயன்படுத்தி பந்தில் விசையை கொடுக்கிறோம்.
ஓய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளை நகர்த்த, நமக்கு ஒரு விசை தேவைப்படுகிறது.
ஓய்வு மற்றும் இயக்கம்
ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு பொருளின் நிலை மாறினால், அது இயக்கம் என்றும், நிலையாக இருந்தால்ஓய்வு என்றும் அழைக்கப்படுகிறது.
விசை
பொருள்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களே விசை என அழைக்கப்படுகிறது. இவை ஒரு பொருளின் நிலை, திசை, வடிவம் மற்றும் வேகத்தை மாற்ற தேவைப்படுகிறது. விசை ஒரு வழி அளவு ஆகும். இது நியூட்டன் (\(N\)) என்ற அலகில் அளவிடப்படுகிறது.
Example:
நாம் தினம்தோறும் பல செயல்களை செய்கிறோம். பொருளை எடுப்பது, திறப்பது, மூடுவது, உதைப்பது, அடிப்பது, தூக்குவது போன்ற செயல்களை விவரிக்க விசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு பொருளின் இயக்க நிலையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
ஒரு பொருளின் மீது விசையை செலுத்தினால் என்ன நடக்கும்?
ஓய்வு நிலையில் உள்ள ஒரு பொருளின் மீது விசையைப் பயன்படுத்துவதால் அப்பொருள் ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கு மாறுகிறது.
நீங்கள் ஒரு மேசையில் ஓய்வுநிலையில் உள்ள புத்தகத்தை தள்ளுங்கள்; புத்தகம் நகர்கிறது.
புத்தகத்தின் மீது விசையைப் பயன்படுத்துவதால் அது ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கு மாறுகிறது.
ஒரு பந்தினை அழுத்தும் போதும், சப்பாத்தி மாவினைப் பிசையும் போதும், ஒரு ரப்பர் பேண்டை இழுக்கும் போதும் பொருளின் வடிவமானது மாறுகிறது.
இந்த நிகழ்வுகளில், விசையைப் பயன்படுத்தும் போது பொருளின் வடிவம் மாறுகிறது.
ஒரு மட்டைவீச்சாளர் ஒரு பந்தை அடித்தால் என்ன நடக்கும்?

மட்டைவீச்சாளர் ஒரு பந்தை அடிக்கும் பொழுது
பந்து ஏற்கனவே இயக்கத்தில் உள்ளது, அதனால் பந்தின் வேகம் அதிகரிக்கிறது. மேலும் பந்தின் திசையும் மாறுகிறது.
இயக்க நிலையில் உள்ள ஒரு பொருளின் மீது விசையைப் பயன்படுத்துவதால் அப்பொருளின் வேகம் மற்றும் திசையில் மாற்றம் ஏற்படுகிறது.